‘தவறு செய்தால் எழுந்து வருவேன்!’ - லீ க்வான் யூ! பெட்டகம் சிந்தனை!!

‘தவறு செய்தால் எழுந்து வருவேன்!’ - லீ க்வான் யூ ! சி ங்கப்பூர் என்பது ஒரு நாடே அல்ல. ஒரு நாட்டுக்கு உரிய முக்கியமான அம்சங்கள் எதுவுமே ...

‘தவறு செய்தால் எழுந்து வருவேன்!’ - லீ க்வான் யூ !

சிங்கப்பூர் என்பது ஒரு நாடே அல்ல. ஒரு நாட்டுக்கு உரிய முக்கியமான அம்சங்கள் எதுவுமே அங்கு இல்லை. உலக வரைபடத்தில் சிங்கப்பூரைக் குறிப்பிட வேண்டும் என்றால், மலேசியாவின் காலடியில் பூமத்திய ரேகையில் ஒரே ஒரு புள்ளி வைத்தால் போதும். அதுதான் சிங்கப்பூர்!
இருந்தாலும், பொருளாதாரரீதியாக உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருக்கும் மிகச் செழிப்பான நாடு அது. ஆரம்பத்தில் சாதாரண மீன்பிடித் துறைமுகமாக இருந்து, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்து, பிறகு ஜப்பான் படையெடுப்பால் ரணகளமாகி, மலேசியாவால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, குறைமாதக் குழந்தைபோல பிறந்த சிங்கப்பூர், இன்று உலகுக்கே ஓர் உதாரணத் தேசமாக இருப்பதற்கு முக்கியக் காரணம், 'சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூ! ஊழலை வெறுக்கும் அனைவருக்குமே ஆதர்சமாக விளங்கியவர் என்பதால், லீ க்வான் யூ தன் 91-வது வயதில் கண்களை மூடியபோது உலகமே கண்ணீர் சிந்தியது.

சிங்கப்பூர் என்ற புதிய தேசம் உருவெடுத்த போது... அதற்கு என எந்தவித தனித்த அடையாளமும் இல்லை. மாண்ட்ரீன் எனப்படும் சீன மொழி பேசும் சீனர்கள், மலாய் எனப்படும் மலேசியா நாட்டின் வம்சாவழியினர், இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள்... என எந்தவித ஒருமித்த அம்சங்களும் இல்லாத வெவ்வேறு கலாசாரங்கள்கொண்ட வெவ்வேறு இனத்தினரின் கலவையாக அது இருந்தது. சிங்கப்பூரைவிட்டு இங்கிலாந்து வெளியேறியபோது, பனிப்பாறையில் மோதிய கப்பலைவிட்டு வெளியேறும் வேகத்தில், சிங்கப்பூரில் முதலீடு செய்திருந்த அயல்நாட்டு கம்பெனிகளும் வெளியேறின. அதனால், தொழிலாளர்கள் பலர் வேலை இழந்தனர். விலைவாசியும் வேலை இல்லாத் திண்டாட்டமும் அச்சமூட்டும் அளவுக்குப் பெருகின. அதனால், சீனாவின் புரட்சியாளர் மாசேதுங்கின் பெயரில் பல கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தீவிரம் அடைந்தன.
அந்தக் காலகட்டத்தில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டுத் திரும்பிய லீ க்வான் யூ என்கிற இளைஞர், ஆரம்பத்தில் எந்த கம்யூனிஸ்ட்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தாரோ, அதே கம்யூனிஸ்ட்களோடு கைகோத்து அரசியல் செய்யும் அளவுக்கு வளர்ந்தார். பிறகு, அவர் ஆரம்பித்த 'மக்கள் செயல் கட்சி’ ஒருசில வருடங்களிலேயே வேகமாக வளர்ந்ததால்,லீ க்வான் யூ கைகளுக்கு ஆட்சிப் பொறுப்பு வந்தது.

குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் ஒரு தாயைப்போல, ஒரு நாட்டை ஒரு தலைவர் பொத்திப் பொத்தி வளர்த்தால் அதை ஆங்கிலத்தில் 'Nanny state' எனக் குறிப்பிடுவார்கள். 'ஆம்... சிங்கப்பூர் ஒரு ’Nanny state’-தான். அதற்கு வளர்ப்புத் தாயாக இருப்பவன் நான்தான்’ என்பது லீ க்வான் யூவின் பிரபல ஒப்புதல் வாக்குமூலம்.

 'வீதியில் எச்சில் துப்பாதீர்கள்’, 'குப்பைகளை வீதியில் வீசாதீர்கள்’, 'கழிவறைகளைப் பயன்படுத்தியவுடன் ஃப்ளஷ் அவுட் செய்யுங்கள்’... எனத் தொடங்கி 'சூயிங்கம் மெல்லத் தடை, சிங்கப்பூர் இளைஞர்கள், படித்த பெண்களைத் திருமணம் செய்யத் தயங்கக் கூடாது... என்பது வரை சிங்கப்பூர் குடிமகன்களுக்கு லீ க்வான் யூ சகல விஷயங்களையும் கண்டிப்போடு சொல்லிக்கொடுத்தார்.

ஒரு சமூகம் திருட்டு பயம், பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற செயல்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட குற்றங்கள் செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். குற்றங்கள் புரியும் நான்கு பேரின் உரிமைக்காக நாட்டையே நாசமாக்கக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். 'நான் வகுப்புகளுக்குத் தாமதமாகச் சென்றபோதெல்லாம், என் ஆசிரியர்களிடம் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அதை நினைத்து நான் எப்போதுமே வருந்தியது இல்லை. இதுபோன்ற தண்டனைகள் சமூகத்துக்கு நன்மை செய்யும்’ எனச் சொல்லி ஒழுக்கமான தேசத்தை அவர் நிர்மாணிக்க முயன்றதை, 'போலீஸ் ஸ்டேட்’ அதாவது 'அடக்குமுறை நாடு’ எனப் பலர் கிண்டல் செய்தனர்.

இதில் விசித்திரம் என்னவென்றால்... இப்படிக்கூடவா ஒரு நாடு இருக்கும் என்பதைக் காண்பதற்காக சிங்கப்பூர் வந்தவர்கள், அந்த நாட்டின் சுத்தத்தைக் கண்டு முதலில் வியந்தார்கள். எந்தவித அச்சமும் இல்லாமல் சர்வசுதந்திரமாக அவர்கள் அங்கே தங்கி சிங்கப்பூரின் அழகை அனுபவித்தபோது, 'இங்கே பிசினஸ் செய்தால் என்ன என அவர்களில் சிலர், அரசாங்க அதிகாரிகளை அணுகினார்கள். லஞ்சம், ஊழல், சிவப்பு நாடா... என எந்தத் தடையும் இல்லாமல் அங்கே அரசு இயந்திரம் செயல்பட்டது அவர்களை மேலும் ஆச்சர்யப்படவைத்தது. வியாபாரத்தில் நம்பிக்கைதான் முக்கியம். அந்த நம்பிக்கையை அந்நிய முதலீட்டாளர்களுக்கு
லீ க்வான் யூ அரசு கொடுத்தது.

அதையும் தாண்டி வரிச் சலுகைகள், உலகின் அற்புதமான துறைமுகம், விமான நிலையம் என்ற வியக்கத்தக்க கட்டுமான வசதிகள். ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்குச் செல்லும் பல கப்பல்களுக்கு, வாயிற்கதவுகள்போல அமைந்திருக்கும் அதன் பூகோள அமைப்பும் உதவியது. 'டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’, 'ஜெனரல் எலெட்ரிக்கல்ஸ்’, 'ஹூலெட் அண்ட் பெக்கார்ட்’ போன்ற சர்வதேச நிறுவனங்களையும் உலகின் முன்னணி வங்கிகளையும் சிங்கப்பூருக்கு ஈர்த்தது!
அரசு அதிகாரிகளை, அமைச்சர்களை, நீதிபதிகளை யாரும் பணத்தைக் காட்டி சபலப்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கத்தில், பன்னாட்டு நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளத்தோடு ஒப்பிடும் அளவுக்கு, லீ க்வான் யூ அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினார். சிங்கப்பூரின் வளம் என்பது தன் நாட்டின் மக்கள்தான் என்பதை உணர்ந்திருந்த லீ க்வான்யூ, கல்விக்காகவும் ஆராய்ச்சி படிப்புகளுக்காகவும் அபாரமாகச் செலவு செய்ததால், நான்யாங் பல்கலைக்கழகம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக வளர்ந்தது; கூடவே கல்வி நிறுவனங்களும் வளர்ந்தன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, திறமைவாய்ந்த பணியாளர்கள் போதுமான அளவுக்குக் கிடைத்தனர். மக்களிடம் தாராளமாகப் பணம் புழங்கியது.

மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தைவிட பொருளாதாரச் சுதந்திரம்தான் முக்கியம் எனக் கருதியவர் லீ க்வான் யூ. அதனால்தானோ என்னவோ, உள்நாட்டுப் பத்திரிகைகள் முதல் வெளிநாட்டுப் பத்திரிகைகள் வரை, தன் அரசை விமர்சித்து எழுதிய பல இதழ்கள் மீது ஆதாரங்கள் கேட்டு, அவர் வழக்குகள் போட்டு நீதிமன்றத்துக்கு இழுத்தார்.

சிங்கப்பூரில் பல கட்சி ஆட்சி முறை இருந்தாலும் முறையாகத் தேர்தல்கள் நடைபெற்றாலும், அங்கே பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் என்பதே இல்லை. இதற்கு காரணம், 'லீ க்வான் யூ அரசு மீது மக்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையா... அல்லது எதிர்க்கட்சிகள் துளிர்விடும்போதே அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு, அவர்களை மஞ்சள் கடுதாசி கொடுக்கும் அளவுக்கு ஆக்கிவிடும் லீ க்வான் யூவின் அரசியலா..?’ என்ற கேள்விக்கு, 'இரண்டும்தான்’ என்பது நடுநிலையாளர்களின் பதில்.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1981-ம் ஆண்டுதான் அவர்களின் நாடாளுமன்றத்துக்கு முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டார். 30 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக சர்வ அதிகாரத்துடன் ஆட்சி செய்த லீ க்வான் யூ, அடுத்த தலைமுறைக்கு வழிவிடும்விதமாக பிரதமர் பதவியில் இருந்து 1990-ம் ஆண்டு விலகினார். பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய பிறகும்கூட பலவிதமான கௌரவப் பதவிகளை லீ க்வான் யூ தன்னிடம் வைத்திருந்தது, நாட்டின் லகான் தன் வசம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். 'லீ க்வான் யூதான் அதிகாரத்தில் இல்லையே என யாரும் தவறு செய்துவிடக் கூடாது என்பதால், பிரதமர் பதவியைவிட்டு விலகும்போதுகூட, 'சவக்குழியில் என்னை இறக்கும் தருணமாக இருந்தாலும் சரி... எங்கேயாவது தவறு நடப்பது தெரிந்தால், நான் எழுந்து வருவேன். ஜாக்கிரதை’ என ஆட்சியாளர்களை எச்சரித்திருந்தார்.

'யார் நீங்கள்... கம்யூனிஸ்ட்டா, சோஷியலிஸ்ட்டா, கேப்பிட்டலிஸ்டா அல்லது மக்கள் நலன் மீது அக்கறைகொண்ட மிதமான சர்வாதிகாரியா?’ என்ற கேள்விக்கு, லீ க்வான் யூ ஒரு முறை பதில் சொன்னார்... 'எனக்கு எந்தவிதமான இசமும் இல்லை. பிரச்னைக்குத் தகுந்த மாதிரிதான் முடிவுகள் எடுப்பேன். அப்படி நான் எடுக்கும் முடிவு, மக்களுக்கு நன்மை புரிந்தால், அதையே தொடர்ந்து பின்பற்றுவேன். நன்மை புரியவில்லை என்றால் அதை விட்டுவிடுவேன்.’

சிங்கப்பூரில் இப்போது நடப்பதும் ஒருவகையில் லீ க்வான் யூவின் ஆட்சிதான். அவரது மக்கள் செயல் கட்சிதான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறது. அவரது மகன் லீ சீன் லூங்-தான் பிரதமர். நாட்டின் கஜானாவாகத் திகழும் 'தெமசெக்’ நிதி நிறுவனத்தின் பெட்டிச் சாவியோ மருமகளிடம், விமானப் போக்குவரத்து இன்னொரு மருமகளிடம், தேசத்தின் மருத்துவக் கேந்திரமோ மூத்த மகளிடம். கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான் 87 உறுப்பினர்கள் கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக எதிர்க்கட்சியினர் ஆறு ஸீட்களைக் கைப்பற்றினர். மக்கள் மாற்றத்தை விரும்புவதை அறிந்துகொண்ட லீ க்வான் யூ, அந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை!

'நான் செய்தது எல்லாமே சரி எனச் சொல்ல மாட்டேன். ஆனால், நான் எதைச் செய்திருந்தாலும் அதை நாட்டின் நன்மைக்காக மட்டுமே செய்தேன்’ என்பதுதான் லீ க்வான் யூவின் கடைசி வாக்குமூலம்!

Related

பெட்டகம் சிந்தனை 8242345949637962350

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item