மில்க் ஸ்வீட்ஸ்! 30 வகை ‘தித்திக்கும்’ குறிப்புகள்

மில்க் ஸ்வீட்ஸ்! ‘தித்திக்கும்’ குறிப்புகள் மில்க் அல்வா தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 1 கப், ரவை - அரை கப், சீ...

மில்க் ஸ்வீட்ஸ்! ‘தித்திக்கும்’ குறிப்புகள் மில்க் அல்வா தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 1 கப், ரவை - அரை கப், சீவிய பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை. செய்முறை: சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, மேலே சொல்லியிருக்கும் மற்ற பொருள்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து, அடி கனமான பாத்திரம் ஒன்றில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி... கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும். ---------------------------------------------------------------------- மில்க் பிரெட் அல்வா தேவையானவை: பால் - 2 கப், ஸ்வீட் பிரெட் - 5 துண்டங்கள், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், பால்கோவா - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) ஏதாவது மில்க் பிஸ்கெட் - 5 அல்லது 6, சர்க்கரை - கால் கப். செய்முறை: பிரெட் துண்டத்தின் ஓரங்களை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்கள். பிஸ்கெட் நீங்கலாக, மற்ற எல்லாப் பொருள்களையும் அடி கனமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். சற்று சேர்ந்து வரும்வரை கிளறி இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பிஸ்கெட்டைப் பொடித்து, அதன்மேல் பரவலாகத் தூவுங்கள் (இது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்). ஆறிய பிறகு, இதை ஃப்ரிஜ்ஜில் நன்கு குளிரவைத்து பரிமாறுங்கள். ----------------------------------------------------------------------------------- பாஸந்தி தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - முக்கால் கப், சீவிய பாதாம், பிஸ்தா - தலா 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், கார்ன்ஃபிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை: வாயகன்ற, கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளறவேண்டாம் (அப்போதுதான் ஆடை படியும்). மேலே படியும் ஆடையை, ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துப் போட்டு, சேகரித்துக்கொண்டே வாருங்கள். பாலில் முக்கால் பாகம் வற்றி, கால் பங்குக்கு வந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். அத்துடன், கால் கப் தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளாரையும் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடுங்கள். பின்னர், சேகரித்து வைத்துள்ள ஆடையை அத்துடன் சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சீவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை அதில் கலந்து, ஆறவிட்டு, நன்கு குளிரவைத்துப் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------- பால் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம் - ஒன்றரை கப், தண்ணீர் - 2 கப், பால் - 1 கப், தேங்காய்ப்பால் - அரை கப், ஏலக்காய் (பொடித்தது) - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: பச்சரிசி மாவுடன் உப்பைக் கலந்து, கொதிக்கும் நீரைத் தேவையான அளவு சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சி, தனியே வையுங்கள். வெல்லத்தைப் பொடித்து, 2 கப் தண்ணீரை அதனுடன் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரையும்வரை கொதிக்க விடுங்கள். பின்னர் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிடுங்கள். இரண்டு கொதி வந்தபின், பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறிதளவு எடுத்து, தேன்குழல் அச்சில் போட்டு, கொதித்துக் கொண்டிருக்கும் வெல்லத் தண்ணீரில் பிழிந்துவிடுங்கள். அதை ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கரண்டிக் காம்பால் லேசாகக் கிளறினால், துண்டுகளாக உடையும். மீண்டும் கொதி வரும்போது, சிறிதளவு மாவை அச்சில் போட்டு, அதில் பிழியுங்கள். ஒரு நிமிடம் கழித்து கரண்டிக் காம்பால் கிளறுங்கள். இதேபோல் எல்லா மாவையும் செய்துகொள்ளுங்கள் (மறந்தும்கூட கரண்டியால் கிளறி விடாதீர்கள். பிழிந்த மாவு எல்லாம், உருவம் தெரியாமல் கரைந்துவிடும்). மாவு முழுவதையும் பிழிந்து முடித்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வேகவிடுங்கள். கடைசியில் தேங்காய்ப்பால், பால், நெய், ஏலக்காய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, இளம்சூடாகப் பரிமாறுங்கள். அதிக சூட்டோடு சாப்பிட்டாலும், மிகவும் ஆறினாலும் இதன் சுவை போய்விடும். ‘இளம்சூடு’தான் இதற்கு சரியான பதம். குறிப்பு: குழலில் பிழியாமல், சீடைபோல உருட்டியும் போடலாம். ஆனால், ஒன்று! ஒரு கை சீடை உருண்டைகளை அடுப்பில் இருக்கும் பாகில் போட்டு, அவை கொதித்தபின்தான் அடுத்த ஈடு போடவேண்டும். பிழிந்தபின் ஒவ்வொரு முறையும் ஒரு நிமிடம் நன்கு கொதிக்கவிட்ட பின்தான் கிளறவேண்டும் என்பதை மறக்காதீர்கள். வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். ----------------------------------------------------------------------------- பனீர் பாயசம் தேவையானவை: பால் - 1 லிட்டர், பனீர் - 200 கிராம், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, பாதியளவு ஆகும்வரை கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளற வேண்டாம். மேலே படியும் ஏடுகளை பாத்திரத்திலேயே ஓரிடத்தில் ஒதுக்கிவிட்டு, கொதிக்க விடுங்கள். பின், அடுப்பை அணைத்துவிடுங்கள். பனீரைச் சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் சர்க்கரையைப் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடுங்கள். பின்னர், அதில் பனீர் துண்டுகளைப் போட்டு மூடி, மூன்று விசில் வந்தவுடன் இறக்குங்கள். வெயிட்டை மெதுவாகத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு, சர்க்கரைப் பாகுடன் கூடிய பனீரை, ஏடு படிந்த பாலில் சேருங்கள். இந்தக் கலவையை ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்குங்கள். குறிப்பு: ஒரு அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் குக்கரை வைத்து, பனீர், பாகு கலவை தயாரித்தால், வேலை சுலபமாக முடியும்! ------------------------------------------------------------------------- மில்க் கேக் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கப், நெய் - அரை கப், வினிகர் - 2 டீஸ்பூன். செய்முறை: முதலில், பாலில் பாதியளவு எடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். பால் கொதிக்கும்போது, அதில் வினிகரைச் சேருங்கள். உடனே பால் திரிந்துவிடும். திரிந்த பாலை (சாதாரண வடிகட்டியில்) வடிகட்டுங்கள். பனீர் ரெடி! மீதியுள்ள பாலை ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் காய்ச்சுங்கள். காயும் பாலில் பனீரைச் சேருங்கள். இது பாதியாகச் சுண்டியதும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து, விடாமல் நன்கு கிளறுங்கள். பால் நன்கு சேர்ந்து கெட்டியாகி, நெய் பிரிந்து வரும்வரை கிளறவேண்டும். பிறகு, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, மற்றொரு தட்டால் நன்கு மூடி, சற்றுச் சாய்வாக வையுங்கள். அதிகப்படியான நெய் வடிந்துவிடும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்வரை ஆறவிடுங்கள். பின்னர் அதை துண்டுகள் போடுங்கள். விருப்பப்பட்டால் சீவி, வறுத்த பாதாமை அதன்மீது தூவி அலங்கரிக்கலாம். குறிப்பு: ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் வைத்தால்தான் பால் சூட்டில் தட்டும் சூடாகி, கேக்கின் அடிப்புறம் சிவந்தும், மேலே பொன்னிறத்திலும், டபுள் கலரில் பார்க்க சூப்பராக இருக்கும்... சாப்பிடவும்தான்! ----------------------------------------------------------------------------- கலாகண்ட் தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் (கடைகளில் கிடைக்கும்) - 1 கப், பனீர் - கால் கிலோ, பால் - அரை கப், கார்ன்ஃபிளார் - 1 டேபிள் ஸ்பூன், பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், சீவிய பிஸ்தா - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: பனீரை நன்கு துருவிக் கொள்ளுங்கள். துருவிய பனீருடன் பால், கன்டென்ஸ்டு மில்க், பால் பவுடர், கார்ன்ஃபிளார் சேர்த்து, அடுப்பில் வைத்து கிளறுங்கள். நன்கு திரண்டு வரும்வரையில் கிளறி, தட்டில் கொட்டி, சமப்படுத்துங்கள். அதன்மீது சீவிய பிஸ்தா, ஏலக்காய்த்தூள் தூவி, வில்லைகளாக வெட்டிப் பரிமாறுங்கள். ---------------------------------------------------------------------------------- திரட்டுப்பால் தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 1 கப் (அல்லது) கருப்பட்டி (பொடித்தது) - ஒன்றரை கப், தயிர் - 1 சிறிய கரண்டி. செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். பாலில் முக்கால் பாகம் சுண்டி, கால் பாகம் ஆனதும் அதில் சர்க்கரை, தயிர் சேர்த்து நன்கு கிளறுங்கள். இது சற்றுத் தளர்வாக இருக்கும்போது, கீழே இறக்கி நன்கு கிளறிக்கொண்டே இருந்தால், ஆற ஆற நன்கு கெட்டிப்படும். குறிப்பு: சுருளக் கிளறி இறக்கினால், ஆறியதும் உதிர்ந்து விடும். ஆனால், சற்று Ôதளர்வானÕ பதத்தில் இறக்கினால், ஆறியவுடன் சரியான பக்குவத்தில் திரட்டுப்பால் இருக்கும். கருப்பட்டி பொடித்துப் போட்டால், தயிர் சேர்க்க வேண்டாம். கருப்பட்டி போட்டதுமே பால் திரிந்துவிடும். -------------------------------------------------------------------------------- தூத்பேடா (அ) பால்பேடா தேவையானவை: பால் - 1 லிட்டர், சர்க்கரை - அரை கப், கார்ன்ஃபிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன், சீவிய பாதாம் அல்லது பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை: கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சுங்கள். பாதியளவு வற்றியவுடன், அதில் சிறிதளவு தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளார், சர்க்கரை, வெண்ணெய் சேருங்கள். இந்தக் கலவை, சற்றுக் கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள். பின்னர், மத்தால் இதை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மசித்ததை நன்கு ஆறவிட்டு, வேண்டிய வடிவத்தில் ‘பேடா’க்கள் செய்து, அதன்மேல் ஏலக்காய் மற்றும் சீவிய பாதாமைக் கொண்டு அலங்கரியுங்கள். -------------------------------------------------------------------------- பால் புட்டரிசி பாயசம் தேவையானவை: பால் - 1 லிட்டர், புட்டரிசி - அரை கப், தேங்காய்ப்பால் - 1 கப், சர்க்கரை - ஒண்ணேகால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: புட்டரிசியை இரண்டு முறை கழுவி, தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் ரவை போல உடைத்துக் கொள்ளவும் (அரிசி ஈரமாக இருப்பதால், அது ஒரே அளவில் ரவை போல உடையும்). ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதனுடன் இரண்டு கப் தண்ணீர், உடைத்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறுங்கள். அரிசி ரவை நன்கு பஞ்சு போல வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------------------------- பால் போளி தேவையான பொருட்கள்: பால் - 1 லிட்டர், மைதா மாவு - அரை கப், சர்க்கரை - 1 கப், சீவிய முந்திரி, பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மைதா மாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துப் பிசறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு பிசையுங்கள். பிசைந்த மாவை சற்று கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளுங்கள். அதை டைமன் வடிவத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். மீதமுள்ள நெய்யுடன் எண்ணெய் சேர்த்து, கடாயில் காயவையுங்கள். நறுக்கி வைத்துள்ள மைதா துண்டுகளை அதில் போட்டுப் பொரித்தெடுங்கள் (நிறம் மாறாமல்). பூரி பொரிப்பதுபோல் பொரிக்கவேண்டும்.) அடுத்து, கனமான பாத்திரத்தில் பாலை வைத்து, பாதியாக வற்றும்வரை கொதிக்கவிடுங்கள். படியும் ஏடை பாத்திரத்தின் ஓரமாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே வாருங்கள். பாதியாக வற்றியவுடன் சர்க்கரை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணையுங்கள். பிறகு, அந்தப் பால் கலவையில், சீவிய பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள், சிறிதளவு சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ, பொரித்து வைத்துள்ள துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பதினைந்து நிமிடம் ஊறவிட்டுப் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------------------------ பால் பொங்கல் தேவையானவை: பால் - 1 லிட்டர், பாஸ்மதி அரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 3 டேபிள் ஸ்பூன், சீவிய முந்திரி - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை (அல்லது) வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை. செய்முறை: பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். அரிசி, பருப்பைக் கழுவி, அடுப்பிலிருக்கும் பாலோடு சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி நன்கு குழைந்து வெந்தபின் சர்க்கரை சேருங்கள். (சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பதானால், பொடித்த வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரையில் கொதிக்கவைத்து வடிகட்டி, வெந்து கொண்டிருக்கும் பால், அரிசி கலவையில் சேர்க்கலாம்.) நன்கு சேர்ந்து வரும்வரையில் கிளறி, இறக்குங்கள். குங்குமப் பூவை, சிறிது சூடான பாலில் கரைத்து, சேருங்கள். முந்திரியை சிறிது நெய்யில் வறுத்துப் பொங்கலில் போட்டு, கடைசியில் மீதமுள்ள நெய், ஏலக்காய் சேர்த்து, நன்கு கிளறிப் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------ பால் கேரட் கீர் தேவையானவை: பால் - 1 லிட்டர், கேரட் - 3, முந்திரி - 6, பாதாம் - 6, சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை. செய்முறை: கேரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் பாதாம், முந்திரி சேர்த்து, ஒரு கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் விட்டு இறக்குங்கள். ஆறியவுடன் திறந்து, பாதாமை எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள். பிறகு, பாதாம், முந்திரி, கேரட் மூன்றையும் விழுதாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை, வேகவைத்த தண்ணீரிலேயே கலந்து வையுங்கள். பாலைப் பாதியாக வற்றும்வரை கொதிக்கவிட்டு, கலந்து வைத்திருக்கும் விழுதை அதனுடன் சேருங்கள். பிறகு, சர்க்கரையையும் சேர்த்து, மேலும் பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து கலந்து, ஆறவிட்டு, குளிரவைத்து ‘ஜில்’லெனப் பரிமாறுங்கள். --------------------------------------------------------------------------------------- பாதாம் பால் தேவையானவை: பால் - 1 லிட்டர், சர்க்கரை - அரை கப், பாதாம் - 20, முந்திரி - 10, குங்குமப்பூ - 1 சிட்டிகை, ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: பதினைந்து பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள். மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள். அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள். பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள். அதில் சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள்,சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்குகலந்து, ஆறவிடுங்கள். ஆறியபின், குளிரவைத்துப் பரிமாறுங்கள். --------------------------------------------------------------------- மில்க் கோகனட் பர்பி தேவையானவை: பால் - 1 லிட்டர், தேங்காய்த்துருவல் - 1 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை: துருவிய தேங்காயையும் சர்க்கரையையும் பாலுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். நன்கு சேர்ந்து சுருண்டு வரும்வரை கிளறினால், பூத்தாற்போல் வரும். அப்போது நெய், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மேலும் அரை நிமிடம் கிளறி இறக்குங்கள். நெய் தடவிய தட்டில் அதைக் கொட்டிப் பரப்பி, வில்லைகள் போடுங்கள். இது, ஒரு வாரம்வரை சுவை மாறாமல் இருக்கும். குறிப்பு: தேங்காயைத் துருவும்போது, ஓட்டில் இருக்கும் கறுப்பு வராமல் துருவவேண்டும். தேங்காய்ப்பூவை, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஓர் சுற்று சுற்றி எடுத்துக் கொண்டால் மிருதுவாக இருக்கும். விரும்பினால், இத்துடன் ஃபுட் கலர் சேர்க்கலாம்! ---------------------------------------------------------------------------------- மில்க் டாஃபி தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் (கடைகளில் கிடைக்கும்) - 1 டின், சர்க்கரை - 1 கப், வெண்ணெய் - 50 கிராம், (விருப்பப்பட்டால்) லிக்விட் க்ளூகோஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1 கப், பாதாம் + முந்திரி + அக்ரூட் - 50 கிராம். செய்முறை: கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர், சர்க்கரை சேர்த்து (விருப்பப்பட்டவர்கள் லிக்விட் க்ளூகோஸையும் கலந்து) அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இது நன்குசேர்ந்து வரும்பொழுது, சிறிதளவு எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும். இந்தப் பதத்தில் வெண்ணையையும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி, சிறிது ஆறவிடுங்கள். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், சுவை மிகு ‘மில்க் டாஃபி’ ரெடி (சூடான கலவையை ஒரு ட்ரேயில் பரப்பி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்). --------------------------------------------------------------------------------- பால் பணியாரம் தேவையானவை: பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப், பால் - 1 லிட்டர், தேங்காய்ப்பால் - 1 கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு. செய்முறை: அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து (வடைமாவு பதத்தில்), கடைசியில் உப்பைச் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள். பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கால் பாகம் வற்றிய பிறகு, சர்க்கரை சேர்த்து, மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். அதில், ஏலக்காய்த் தூள், தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துவையுங்கள். கடாயில் எண்ணெய் காயவைத்து, அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, சுண்டைக்காயளவு கிள்ளி, எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் (சிவந்துவிடாமல்) எடுங்கள். எல்லா மாவையும் இதேபோல் பொரித்து வைத்துக்கொள்ளுங்கள். பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பாக இந்தப் பணியாரங்களை, ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பாலில் கலந்து பரிமாறுங்கள். இது செட்டிநாட்டு ஸ்பெஷல் ஸ்வீட். குறிப்பு: மாவில் சிறிதளவேனும் அரிசியோ, உளுந்தோ அரைபடாமல் இருந்தால் பணியாரம் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு. எனவே, அரைக்கும்போதே மாவை அடிக்கடி தள்ளிவிட்டு, நன்கு அரையுங்கள். ---------------------------------------------------------------------- குலாப்ஜாமூன் தேவையானவை: பால் - 1 லிட்டர், மைதா - அரை கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஆப்பசோடா - 1 சிட்டிகை, சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, பொரிப்பதற்கு - தேவையான அளவு எண்ணெய். செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, சுண்டி வரும்போது கிடைக்கும் கோவாவை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அடுத்து, மைதா மாவுடன் ஆப்ப சோடா சேர்த்து இரு முறை சலித்து, நெய் சேர்த்துப் பிசறிக்கொள்ளுங்கள். பின்னர், சலித்த மைதா கலவையுடன் கோவாவைச் சேர்ந்து (தேவையானால் சிறிது பால் தெளித்து) நன்கு பிசையுங்கள். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெயுடன் மீதமுள்ள நெய்யையும் கலந்து, மிதமான தீயில் காயவிடுங்கள். காயும் எண்ணெயில் கோவா உருண்டைகளை போட்டு, நிதானமாக வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுத்துவிடுங்கள். ஜாமூன் உருண்டைகள் ரெடி. மற்றொரு அடுப்பில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும், சிறிதளவு பாலைச் சேருங்கள். பால் சேர்ந்ததும், பாகில் திரண்டு வரும் அழுக்கை எடுத்துவிடுங்கள். ஐந்து நிமிடத்துக்கு பாகு கொதித்ததும் இறக்கிவிடுங்கள் (அதாவது அரைக் கம்பி பதத்தில்). அதில் ஏலக்காய்த்தூள், பொரித்து வைத்துள்ள ஜாமூன் சேர்த்து, நன்கு ஊறியதும் பரிமாறுங்கள். ---------------------------------------------------------------------------------- மில்க் ஐஸ்கிரீம் தேவையானவை: பால் - 1 லிட்டர் + அரை கப், சர்க்கரை - அரை கப், வெண்ணெய் - 50 கிராம், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன். செய்முறை: ஒரு லிட்டர் பாலை பாதியளவு வருமாறு வற்றக் காய்ச்சுங்கள். அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பின்னர், அரை கப் பாலில் கார்ன்ஃபிளாரைக் கரைத்து, கொதிக்கும் பாலுடன் சேருங்கள். அத்துடன் வெண்ணெயையும் சேருங்கள். 2 நிமிடம் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, வெனிலா எசன்ஸை சேருங்கள். நன்கு ஆறவிடுங்கள். ஒரு மரக்கரண்டியாலோ அல்லது முட்டை அடிக்கும் கருவியாலோ இந்தக் கலவையை நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீஸரில் வைத்து, பாதியளவு செட் ஆனவுடன் வெளியில் எடுத்து திரும்பவும் ஒருமுறை அடியுங்கள். மறுபடியும் ஃப்ரீஸரில் வைத்து குளிரவிட்டு, கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------------ பனீர் கோகனட் பால்ஸ் தேவையானவை: பால் - 1 லிட்டர், வினிகர் - 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - கால் கப், ஃபுட் கலர் (ரோஸ்) - 1 சிட்டிகை, ரோஸ் எஸன்ஸ் - சில துளிகள், தேங்காய் - ஒரு பெரிய மூடி, சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்டினால், பனீர் கிடைக்கும். பனீருடன் பொடித்த சர்க்கரை, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள. சர்க்கரை உருகி, இளகி திரும்ப சற்று சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கிவிட வேண்டும். அதில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, அதனுள் பனீர் உருண்டை களை வைத்து, நன்கு மூடி உருட்டுங்கள். ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்து, பரிமாறுங்கள். -------------------------------------------------------------------------- ரஸமலாய் தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 2 கப், தண்ணீர் - இரண்டரை கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை, சீவிய பிஸ்தா + பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன், வினிகர் - 2 டீஸ்பூன், மைதா - 1 டீஸ்பூன். செய்முறை: ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். அதனுடன் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து, பால் பாதியளவு ஆகும்வரை கொதிக்க விடுங்கள். பிறகு, அதனை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து வையுங்கள். மீதமுள்ள ஒரு லிட்டர் பாலிலிருந்து பனீர் செய்து (செய்முறைக்கு பார்க்க... 93-ம் பக்கம்) கொள்ளுங்கள். அதை ஒரு தட்டில் கொட்டிக்கொண்டு, மைதா சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். குக்கரில் இரண்டரை கப் தண்ணீரையும் மீதமுள்ள சர்க்கரையையும் சேருங்கள். குக்கரை அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போடுங்கள். பின்னர் குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்குங்கள். குக்கர் வெயிட்டை லேசாகத் தூக்கி, பிரஷரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுங்கள். பின்னர், வெந்திருக்கும் உருண்டை களை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்திப் பிழிந்து, காய்ச்சி வைத்துள்ள பாலில் போடுங்கள். நன்கு ஊறியவுடன் பரிமாறுங்கள். ------------------------------------------------------------------- ஃப்ரூட் கஸ்டர்டு தேவையானவை: பால் - 1 லிட்டர், வெனிலா கஸ்டர்டு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 கப், பழக்கலவை - 2 கப் (ஆப்பிள், பேரிக்காய், சப்போட்டா, வாழைப்பழம், ஆரஞ்சு எல்லாம் சேர்த்து பொடியாக நறுக்கியது). செய்முறை: பழக்கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள். காயும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து, கொதிக்க விடுங்கள். தனியாக எடுத்து வைத்திருக்கும் அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவையைச் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறுங்கள். --------------------------------------------------------------------------- பால்கோவா தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 1 கப், சீவிய பிஸ்தா - 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: பாலை அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். பால் நன்கு வற்றி, சேர்ந்தாற்போல் வரும்போது, சர்க்கரையைச் சேர்த்து, நன்கு கிளறுங்கள். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறுங்கள். கோவா திரண்டு வரும் சமயம், சீவிய பிஸ்தா, ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பரிமாறுங்கள். ----------------------------------------------------------------------------------------- ஃபிர்ணி தேவையானவை: பால் - 1 லிட்டர், பாஸ்மதி அரிசி - அரை கப், சர்க்கரை - 1 கப், இனிப்பில்லாத கோவா (குலாப்ஜாமூனுக்கு சொன்ன முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்; கடையிலும் வாங்கலாம்) - கால் கப், தோல் நீக்கி, சீவிய பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், சீவிய பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை. செய்முறை: பாலைக் காய்ச்சுங்கள். பாஸ்மதி அரிசியை ரவை போல் உடைத்து, காயும் பாலில் சேருங்கள். அத்துடன் ஒரு கப் தண்ணீரையும் சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். இரண்டும் சேர்ந்து நன்கு கொதிக்கும்போது, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, கலந்து இறக்குங்கள். குளிரவைத்துப் பரிமாறுங்கள். புத்தம்புதிய பன்னீர் ரோஜா இதழ்களை மேலே தூவியும் பரிமாறலாம். கண்ணுக்கும் சேர்த்து விருந்து படைக்கும் இது. -------------------------------------------------------------------------------------- குல்ஃபி தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 200 கிராம், முந்திரி - 20, பாதாம் - 20, ஸ்வீட் பிரெட் - 4 துண்டங்கள், ஜெலட்டின் (சர்க்கரை போல இருக்கும் - கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிடுங்கள். பாலை அடுப்பில் வைத்து, பாதியாகும்வரை நன்கு காய்ச்சுங்கள். பின்னர் சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கொதிக்கும்போது, பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பாதாமை, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, தோலை உரித்தெடுங்கள். முந்திரி, பாதாமை சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு அரையுங்கள். அரைத்த விழுதைக் காய்ந்த பாலில் சேருங்கள். கால் கப் தண்ணீரில் ஜெலட்டினைக் கரைத்து, பால் கலவையில் சேருங்கள். ஏலக்காய்த் தூளையும் கலந்து கொள்ளுங்கள். ஆறியதும், குல்ஃபி மோல்டுகள் அல்லது கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து, நன்கு குளிர்ந்ததும் பரிமாறுங்கள்.

Related

30 நாள் 30 வகை சமையல் 2521395133332681662

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item