Thursday, August 27, 2015

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே...!

‪#‎படித்ததில்_பிடித்தது‬.....
சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.
இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.
குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.
தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது அந்த குழந்தை. சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.
இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.
காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாடு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.
பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.
டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.
ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.
அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, என் கம்பனிக்கு அடுத்து இருக்கும் ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதை நினைவில் வைத்துக்கொண்டு, என் ஊராக இருக்கும் என்று என்னிடம் வந்தார். விபரங்கள் கூறினார். குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.
நான் அவரிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.
அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும், எனக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று. அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தேன், அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டேன்.
ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம். நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற,
சௌதி என்னிடம் பேச சொல்ல, நான் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அனைத்தையும் சௌதியிடம் கூறினேன்.
அவரோ தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.
சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டேன். அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.
அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தேன்.
அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து, அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.
குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.
நேராக அவர்களை அழைத்துக் கொண்டு சாத் மருத்துவமனைக்கு சென்றோம்.
மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.
குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் சென்றோம். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார். அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றோம்.
மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.
எனக்கோ எதோ ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.
சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.
ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை, சடார்….. என்று எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.
எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.
அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள். சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.
அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.
அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை, குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.
கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே.

கணிணிக்குறிப்புக்கள்/வேர்ட் டிப்ஸ்!

வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.
5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.
6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.
8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.

பார்மட்டிங் மாற்ற: வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z)அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள்.
டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந்தெடுத்து கண்ட்
ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+N) அழுத்தவும்.

கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify)அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l : பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.
Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.

கணிணிக்குறிப்புக்கள், கேள்வி - பதில்

கேள்வி: ஜிமெயிலில் எனக்கு ஒரு அக்கவுண்ட் உள்ளது. இதில் அஞ்சல்களை அனுப்ப செண்ட் பட்டன் அழுத்தியவுடன், குறிப்பிட்ட காலத்தில் அதனைத் திரும்பவும் பெற முடியும் என்று சொல்கின்றனர். சில வேளைகளில் தவறாக அனுப்பிய பின்னர், இந்த தேவை ஏற்படுகிறது. ஆனால், என் கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயில் அக்கவுண்ட்டில் இது இல்லை. வேறு பிரவுசர் வழியாகவும் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. என்ன செய்திட வேண்டும்?
ஜி. ப்ரசன்ன லட்சுமி, செங்கல்பட்டு.
பதில்:
எந்த பிரவுசர் வழியாகப் பார்த்தாலும், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் ஒரே அக்கவுண்ட்தான். அதன் செட்டிங்ஸ் மாறாது அல்லவா? இனி உங்கள் பிரச்னைக்கு வருவோம். ஜிமெயில் கடிதங்களை அனுப்பியவுடன், அடடா! அனுப்பியிருக்க வேண்டாமே என எண்ணினால், உடனே இன்பாக்ஸ் மேலாக, இதனை நிறுத்தும் Undo பட்டனை அழுத்தினால், அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது. இது உடனே சில விநாடிகளுக்குள் நடக்க வேண்டும். எத்தனை விநாடிகளில் இதனை மேற்கொள்ளலாம் என்பதனை நீங்களே அதற்கான செட்டிங்ஸ் மூலம் அமைத்துக் கொள்ளலாம். கீழே குறிப்பிட்டுள்ள வழிகளில் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில் நுழையவும். கிடைத்தவுடன், உங்கள் திரையில் வலது மூலையில் மேலாகக் காணப்படும் ஐகான் அருகே செல்லவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், 'Settings' என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. மீண்டும் திரையில் வலது பக்க மூலையில் உள்ள 'Labs' என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது கிடைக்கும் விண்டோவில், கீழாகச் செல்லவும்.
4. இங்கு “Undo Send” என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இதனை இயக்கும் வகையில் enable செய்திடவும்.
5. தொடர்ந்து திரையின் கீழாகச் சென்று 'Save Changes' என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி, நீங்கள் ஜிமெயில் தளத்தில், மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், மேலாக, “Your message has been sent” என்பதன் அருகே, Hit 'Undo' to recall your email என்று ஒரு செய்தி கிடைக்கும். 10 விநாடிகளுக்குள், இந்த இடத்தில் கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது. இந்த கால நேரத்தை அதிகப்படுத்த விரும்பினால், மீண்டும் லேப்ஸ் சென்று அங்கு “Undo Send” ஆப்ஷன்ஸ் பகுதியில், இந்த நேரத்தினை 30 விநாடிகள் வரை நீட்டிக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், முன்பு விண்டோஸ் சிஸ்டத்துடன் வழங்கப்பட்ட சில புரோகிராம்கள் வழங்கப்படவில்லை என்ற தகவல் அடிக்கடி தரப்படுகிறது. ஆனால், ஒவ்வொன்று குறித்துத்தான் இந்த தகவல்கள் கூறுகின்றன. மொத்தமாக, எவை எல்லாம் தரப்படவில்லை என்று கூற முடியுமா?
செ. வைகுந்த், திண்டுக்கல்.
பதில்
: நல்ல கேள்வி. நாம் விரும்பி பயன்படுத்தும் எந்த புரோகிராம்கள், விண்டோஸ் 10ல் கிடைக்காது என்று நாம் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். பொதுவாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகும்போது, பழைய புரோகிராம்களுக்கான ட்ரைவர் புரோகிராம்கள் இணைந்து செயல்படாமல் போகலாம். அல்லது நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்களில் பிரச்னை ஏற்படலாம். ஆனால், இந்த முறை விண்டோஸ் 10ல், சில புரோகிராம்களே கழட்டிவிடப்பட்டுள்ளன. அவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. நீங்கள் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், அல்டிமேட், மீடியா செண்டருடன் கூடிய விண்டோஸ் 8 ப்ரோ அல்லது விண்டோஸ் 8.1 ப்ரோ வைத்திருந்து, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்தால், விண்டோஸ் மீடியா செண்டர் நீக்கப்படும்.
2. டிவிடி இயக்கி, அதில் உள்ளவற்றைக் காண, தனியே ஒரு சாப்ட்வேர் புரோகிராம் தேவைப்படும்.
3. விண் 10 இன்ஸ்டாலேஷன் செயல்பாட்டின் ஓர் அங்கமாக, டெஸ்க்டாப் கேட்ஜட்ஸ் நீக்கப்படும்.
4. விண்டோஸ் 10 ஹோம் பதிந்து கொள்பவர்கள், விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களைக் கட்டுப்படுத்தும் வசதி கிடைக்காது. தானாகவே, கட்டாயமாக அவை அப்டேட் செய்யப்படும். விண்டோஸ் 10 ப்ரோ மற்றும் எண்டர்பிரைஸ் பதிப்பினை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு, அப்டேட் பைல்களை ஏற்றுக் கொள்வதற்கான விருப்பத் தேர்வு உரிமை கிடைக்கும்.
5. சாலிடெர், மைன்ஸ்வீப்பர் மற்றும் ஹார்ட்ஸ் ஆகிய விளையாட்டுகள், விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் தரப்பட்டன. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்யப்படுகையில், இந்த விளையாட்டுகள் நீக்கப்படும். அந்த இடத்தில் “Microsoft Solitaire Collection” and “Microsoft Minesweeper.” என்பவை தரப்படும்.
6. உங்கள் கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி. பிளாப்பி ட்ரைவ் இருந்தால், இதற்கான ட்ரைவர் புரோகிராமினை விண்டோஸ் அப்டேட் அல்லது கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
7. உங்களுடைய கம்ப்யூட்டரில் Windows Live Essentials பதியப்பட்டிருந்தால், அதற்கான ஒன் ட்ரைவ் அப்ளிகேஷன் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒன் ட்ரைவ் இன்பாக்ஸ் அப்ளிகேஷன் அமைக்கப்படும்.
ஆனால், இது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள்ளாக, பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இவற்றின் இடத்தில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கிவிடும்.

கேள்வி: சென்ற வார கம்ப்யூட்டர் மலரில், விண்டோஸ் 10 பதிந்தவர்கள், மீண்டும் விண்டோஸ் 8 அல்லது 7க்குச் செல்ல வேண்டும் என்றால், ஒரு மாதத்திற்குள் திரும்ப வேண்டும். இல்லை என்றால் இயலாது என்ற தகவலைத் தந்துள்ளீர்கள். அதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும் என்பதனைத் தெளிவாகக் கூறவும். அந்த உறுதியின் பேரில் தான், விண்டோஸ் 10க்கு மாற திட்டமிட்டுள்ளேன்.
என். சுவாதி பிரகாஷ், சென்னை.
பதில்
: நல்ல திட்டம். புதிய ஸ்டார்ட் மெனு, உதவும் கார்டனா மற்றும் அனிமேஷன்கள் கொண்ட விண்டோஸ் 10 உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தாராளமாக, ஒரு மாத கால அவகாசத்திற்குள் நீங்கள், முன்பு பயன்படுத்தி வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு திரும்பச் செல்ல, மைக்ரோசாப்ட் வழி தருகிறது. அதற்கான செயல்முறை வழிகள் இதோ:
1. முதலில் Start > Settings > Update & security > Recovery எனச் செல்லவும்.
2. இப்போது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை ரீசெட் செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திலேயே தங்கிக் கொள்ள ஓர் ஆப்ஷன் தரப்படும். ஆனால், இதனை மேற்கொண்டால், அடுத்து பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்ல முடியாது.
3. இன்னொரு ஆப்ஷனாக, “Go back to Windows 7 [or 8.1]” தரப்படும். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பயன்படுத்தி வந்த முந்தைய சிஸ்டத்திற்குச் செல்லலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திடுகையில், கம்ப்யூட்டரில் என் பணி முடிந்துவிட்டால், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டுப் பின் மீண்டும் வந்து, சிஸ்டம் டவுண்லோடிங் செய்திட முடியுமா? தரவிறக்கம் செய்வது, முன்பு விட்ட இடத்திலிருந்து தொடருமா?
என். சுவிசேசமுத்து, திருநெல்வேலி.
பதில்
: கூடாது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்திடுகையில், கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டால், மீண்டும் அது விட்ட இடத்தில் தொடங்கும் என்பது இயலாது. மேலும், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய அளவிலான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிவாகும். அப்கிரேட் மட்டும் அல்ல. எனவே, உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும் பட்சத்தில்தான், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரவிறக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை 90 முதல் 180 நிமிடங்கள் நீங்கள் இதற்கென ஒதுக்க முடியும் என்றாலே, இந்த செயல்பாட்டினைத் தொடங்க வேண்டும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், நான் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தப்படும் புரோகிராம்கள் கூட, பூட் ஆகும்போது இயக்கப்பட்டு பின்னணியில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கம்ப்யூட்டரை இயக்கி முடிக்கும்போது இவை தெரிய வருகின்றன. இவற்றை நான் வேண்டும் போது மட்டும் இயக்கும் வகையிலும், பூட் ஆகும்போது இயங்காமல் இருக்கும்படியும் எப்படி செட்டிங்ஸ் அமைக்கலாம்? அன்பு கூர்ந்து வழி காட்டுங்கள்.
என். கோபால், திருச்சி.
பதில்:
நல்ல கேள்வி. பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில நம் அனுமதியின் பேரில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயக்கப்படும் வகையில் அமைந்துவிடுகின்றன. சில நம் அனுமதி இல்லாமலேயே இந்த நிலையை எடுத்துக் கொள்கின்றன. ஆண்ட்டி வைரஸ், தமிழ் டைப் செய்திடத் தேவையான ட்ரைவர் புரோகிராம் போன்றவை இவ்வாறு இயங்குவது நமக்குத் தேவையான ஒன்றாகும். ஆனால், தேவையற்றவற்றை இயக்குவதிலிருந்து நிறுத்த வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு, இவற்றின் பின்னணி இயக்கத்தால், மிகவும் மெதுவாகச் செயல்படும். இனி, இவற்றை எப்படி நிறுத்துவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + R அழுத்தினால், ரன் விண்டோ கிடைக்கும். இதில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்தினால், சிஸ்டம் கான்பிகரேஷன் என்னும் விண்டோ கிடைக்கும். இதன் மூலம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதை வரையறை செய்து அமைக்கலாம். இதில் உள்ள Startup டேப் அழுத்தினால், விண்டோஸ் இயக்கம், இயங்கத் தொடங்குகையில், இயங்கத் தொடங்கும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் Start Menu's Startup போல்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கும். இதனைத்தான் நாம் சற்று சீரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்கும் முன், இந்த பட்டியலில் இருக்கும் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கட்டாயம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலே சொன்ன பட்டியலை முழுமையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கவும். பின்னர், நமக்குத் தேவை இல்லாத புரோகிராம்கள் என உறுதி செய்யக் கூடியவற்றை நீக்கவும். இதற்கு, இந்த புரோகிராம் முன் உள்ள செக் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்தால், அந்த டிக் அடையாளம் நீக்கப்படும். இனி, அந்த புரோகிராம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்காது. இதனைச் செய்து முடித்தவுடன், ஓகே கிளிக் செய்திடவும். உடன், சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவா அல்லது பின்னர் செய்திடலாமா என்று கேள்வி கேட்டு ஒரு விண்டோ கிடைக்கும். உங்கள் வசதிப்படி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடலாம்; அல்லது, அந்த வேலையைப் பின் நாளில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Restart மற்றும் 'Exit without restart' என்ற ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். உங்கள் முடிவுக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம்.
மேலே சொன்ன வழிகளில் நீக்கிய எதனையாவது மீண்டும் தேவை என நீங்கள் எண்ணினால், அதனை மீண்டும் எளிதாக இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது சேவை பட்டியலில் இணைக்கலாம்.
குறிப்பிட்ட டேப் அழுத்தி, பின், இவற்றின் பட்டியலை வரிசையாகப் பார்த்து, நீங்கள் மீட்டு இயக்க விரும்பும் புரோகிராமினை டிக் அடித்து சேர்க்கவும்.
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீக்குவதாயினும், நீக்கியதைச் சேர்ப்பதாயினும், மேலே கூறப்பட்ட வழிமுறைகளை மேற்கொண்ட பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் தான், நாம் விரும்பிய செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் கிடைக்காதா? எட்ஜ் பிரவுசர் தரப்படுவதால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீக்கப்படுமா? என் நண்பர் விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்தார். அந்தக் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இல்லை. அதனால் தான் இந்தக் கேள்வி?
ஆர்.ஆப்ரஹாம், புதுச்சேரி.
பதில்:
இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீக்கப்படவில்லை. அது விண்டோஸ் 10 உடன் தரப்பட்டுள்ளது. சர்ச் பார் கட்டத்தில் Internet Explorer என டைப் செய்து, கிடைக்கும் விடைகளில், முதல் விடையில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் கிடைக்கும். அது மட்டுமல்ல, உங்களுடைய பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் செட்டிங்ஸ், பேவரிட் தள முகவரிகள் என எல்லாம் அங்கு இருப்பதனைப் பார்க்கலாம். உங்களுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டூல் பார்களும் இருக்கும்.

விண்டோஸ் 10ல் வை-பி இணைப்பு!

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தத் திட்டமிடுவோரும், தற்போது அதிகம் கவலைப்படுவது வை பி செயல்பாடு குறித்துத்தான். விண்டோஸ் 10 சிஸ்டம் நம் வை பி இணைப்பை, நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும், நாம் அறியாமலேயே வழங்குகிறது. இதனால், நம் ரகசிய நெட்வொர்க் செயல்பாடு அனைவருக்கும் தெரிய வருகிறது என்ற பயம் தான் அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது.
விண் 10 சிஸ்டத்தில், வை பி இணைப்பில், இதுவரை இருந்த விண்டோஸ் சிஸ்டங்களில் இல்லாத வகையில் ஒரு சிறிய மாற்றத்தினையே மேற்கொண்டுள்ளது. இதனைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சிலரே, இது போல தவறான தகவல்களை நம்பி கலக்கம் அடைந்துள்ளனர். மாறாக, விண் 10 நம் வை பி இணைப்பினை என்ன செய்கிறது என்று இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், புதியதாக Wi-Fi Sense என்ற ஒரு வசதி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், நம் வை பி இணைப்பினை, பாஸ்வேர்ட் இல்லாமலேயே வழங்குகிறது. விண் 10, தானாக, இவர்களை வை பி இணைப்பில் இணைக்கிறது. இந்த சின்ன வசதி குறித்துத்தான், பலரும் அச்சமடைந்துள்ளனர்.
முதலில், விண்டோஸ் 10, உங்கள் வை பி பாஸ்வேர்டை யாருக்கும் வழங்குவதில்லை. மேலும், இந்த விஷயத்தில், விண்டோஸ் 1-0 சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உள்ளது. வை பி யாருக்கெல்லாம் தரப்பட வேண்டும். அல்லது மொத்தமாக அனைவருக்கும் தடை செய்யப்பட வேண்டுமா என்றெல்லாம் நீங்கள் முடிவு எடுத்து, செட்டிங்ஸ் அமைக்கலாம்.
எடுத்துக் காட்டாக, உங்கள் நண்பர் ஒருவர் Outlook, Outlook.com/Hotmail, Skype, or Facebookல் உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்தால், அவர் தானாகவே லாக் இன் செய்யப்படுகிறார். குறிப்பிட்ட ஒருவரை உங்கள் காண்டாக்ட் பட்டியலிலிருந்து தூக்கிவிட்டால், அவருக்கு இணைப்பு கிடைக்காது. மேலும், மேலே தரப்பட்டுள்ள சேவைகளில், எந்த சேவைத்தளத்திலிருந்து காண்டாக்ட் தகவல்களைப் பெற்று இயங்க வேண்டும் என்பதனையும் நீங்கள் அமைத்து கட்டுப்படுத்தலாம். "For networks I select, share them with my contacts” என்று இருக்கும் இடத்தில், டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும். உங்கள் கம்ப்யூட்டரில் வை பி இயக்கம் இயங்கக் கூடியதாக இருந்தால் Network & Internet>>Wi-Fi>>Manage Wi-Fi Settings என்று சென்று "For networks I select, share them with my contacts" என்று இருப்பதில் டிக் குறியீட்டினை எடுத்துவிட்டால் போதும்.
முதன் முதலில், வை பி நெட்வொர்க் ஒன்றுடன் நீங்கள் இணைகையில், மைக்ரோசாப்ட் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்கும். இந்த கேள்விக்கு No என்று கொடுத்துவிட்டால், விண் 10ல் உள்ள Wi-Fi Sense வசதி, அந்த நெட்வொர்க்கில் வேறு யாரையும் அனுமதிக்காது. நீங்கள் இவ்வாறு ஏற்படுத்தும் அமைப்பினை, பின்னர், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது வ Wi-Fi Sense செயல்பாட்டினையே நிறுத்திவிடலாம்.
தற்போது பலவாறாகப் பேசப்படும் இந்த சேவை குறித்து மேலும் அறிய, http://www.komando.com/tips/318802/stop-windows-10-from-automatically-sharing-your-wi-fi-with-others/ என்ற இணையதளப் பக்கத்தினைக் காணவும்.

Wednesday, August 26, 2015

நெஞ்சை அள்ளும் முஸ்லீம்களின் சமயம் கடந்த‌ மனிதாபிமானம்.!

video
நெஞ்சை அள்ளும் முஸ்லீம்களின் சமயம் கடந்த‌ மனிதாபிமானம்.

சகோதரத்துவமும், சமூக நல்லிணக்கமும் நிறைந்த‌ முஸ்லீம்கள்.

சமையல் சந்தேகங்கள்!

சமையல் சந்தேகங்கள்!
“வீட்டிலேயே பழங்களைப் பழுக்க வைக்க முடியுமா?”
“தாராளமாக முடியும். முற்றி லேசாக மஞ்சள் நிறம் வர ஆரம்பிக்கும் வாழை, மா போன்ற பழங்களை ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி வைத்து, வாழைச் சருகுகளால் மூட வேண்டும். இத்துடன், நன்றாகப் பழுத்த எலுமிச்சை அல்லது சாத்துக்குடிப் பழங்களில் ஏதேனும் ஒன்றைப் போட்டு மூடி வைத்து விட்டால் 3, 4 நாட்களில் பழுத்து விடும். சாத்துக்குடி, எலுமிச்சைப் பழத்தில் இருந்து வரும் ஒருவித, ‘என்சைம்’ காயாக உள்ளவற்றைக் கனியாக்கி விடும். பழங்களும் ஒரே சீராகப் பழுத்து விடும். ஒருபுறம் கனிந்தும் ஒருபுறம் காயாகவும் இருக்காது. நமது தேவைக்கு ஏற்ப பழுக்கப் பழுக்க உபயோகித்துக் கொள்ளலாம். இதில் எந்தப் பக்க விளைவுகளும் இருக்காது. எல்லா பழங்களையும் இந்த முறையில் பழுக்க வைக்கலாம்.”
 “கிரைண்டரில் அரைத்தால்தான் உளுந்து வடை, போண்டா போன்றவை பஞ்சு பஞ்சாக இருக்கின்றன. ஆனால், உளுந்து அரைத்த பிறகு, கிரைண்டரை கழுவுவது கடினமாக இருக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம்?”
“வடைக்கு அரைத்து முடித்ததும் ஒரு கப் புழுங்கல் அரிசி, 2 காய்ந்த மிளகாய், 3 ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வடைக்கு அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே ஊற வைத்து விடவும். வடைக்கு அரைத்து முடித்ததும் உப்பு சேர்த்து ஊறிய அரிசி, பருப்பை கொரகொரப்பாக அரைத்து எடுக்கலாம். அரிசியின் கொரகொரப்பில் கிரைண்டரைக் கழுவுவதும் சுலபம். இப்படி அரைத்த மாவில் வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அடையாக ஊற்றி எடுக்கலாம்.”
“வெளியூர்களுக்குக் கொண்டு செல்லும் போது ஐந்து மணி நேரம் அளவுக்குக் கெட்டுப்போகாத வகையில் கேசரி, பணியாரம் ஆகியவற்றைச் சமைக்க முடியுமா?”
“அவல், ரவை, சேமியா போன்றவற்றில் கேசரி தயாரிக்கும் போது நெய்யில் வறுத்து தண்ணீர் ஊற்றி, வேக வைத்த பிறகு, சர்க்கரையை நேரடியாகச் சேர்க்கக்கூடாது. வேறு ஒரு கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு ஒரு ஸ்பூன் மட்டும் நீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து, கம்பிப் பதத்துக்கு பாகு காய்ச்சி சேர்க்க வேண்டும். இத்துடன், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் ஆறு மணி நேரம் வரை கெடாது.
வெல்லம், தேங்காய்த் துருவல் போன்றவற்றை கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் போட்டு ஒரு ஸ்பூன் மட்டும் நீர் ஊற்றி, கம்பிப் பதத்தில் பாகு வைத்து ஆற வைத்து, அதை பணியார மாவில் சேர்த்து  ஊற்ற வேண்டும். சிறிது எண்ணெய், சிறிது நெய் ஆகியவற்றை ஊற்றி, திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், காலை சமைத்த பணியாரம், இரவு வரை  கெடாது.”
“கறுப்புப் புளியில் சமைக்கும் சாம்பார், ரசம், புளிக்காய்ச்சல் ஆகியவை கறுப்பாக இருக்கிறது. நிறத்தை மாற்ற முடியுமா?”
“கறுப்புப் புளியைக் கொஞ்சமாக ஊற வைத்துச் சேர்த்தாலே போதுமானது. ரசம் செய்து முடித்தவுடன் இறக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கினால், கறுப்பு நிறம் ஓரளவு குறையும். புளிக்காய்ச்சல், புளிக்குழம்பு போன்றவற்றுக்கு மஞ்சள்தூள் சற்றுத் தூக்கலாக சேர்த்தால் கறுப்பு குறையும். சாம்பாருக்கு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் மல்லி(தனியா), 3 ஸ்பூன் தேங்காய்த்துருவல் வறுத்து, பொடி செய்து சேர்த்தால், கறுப்பு குறையும். அரைத்து விட்ட சாம்பார் மாதிரி ருசியாகவும் இருக்கும்.”
“சில காய்கள், தண்டுகள் நறுக்கியதும் கறுத்து விடுகின்றன. சில காய்கள் கசக்கின்றன. இவற்றை எப்படிப் பக்குவமாக சமைப்பது?”
“வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை நறுக்கினால் கறுத்துப்போகும். இவற்றை நறுக்கிய பிறகு, மோரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து சமைத்தால் கலர் மாறாது. இவற்றை நறுக்கும்போது, கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் அரிக்கும் என்பதால், சிறிதளவு புளிக்கரைசல் ஊற்றி வேக விட வேண்டும். அரிசி களைந்த கழுநீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு சமைக்க வேண்டும்.
புதினா, மல்லி போன்றவற்றை அரைக்கும்போதே ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்தால் கலர் மாறாது. பாகற்காயை வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெல்லம், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு புளி சேர்த்து வேகவைத்தால், கசப்பு தெரியாது. நாரத்தை, எலுமிச்சை போன்றவற்றை முழுவதுமாக கைகளால் அழுத்திப் பிழியாமல் தேவையான அளவு மட்டும் பிழிந்தால் போதும். கசப்பு ஏறாது.”
“குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த உணவுப் பொருட்களை எப்படி உபயோகிப்பது?”
“குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் குழம்பு, கறி போன்றவற்றை வெளியே எடுத்து வைத்து, அதன் குளிர்ச்சி மாறின பிறகு, ‘டபுள்பாயிலிங் முறையில் அதாவது, அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்து, அது கொதித்துக் கொண்டிருக்கும் போதே குழம்பு, கறி போன்றவை வைத்திருக்கும் பாத்திரங்களை அதில் வைத்துக் கிளறி சுட வைக்க வேண்டும்.”
குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் பாலைக் கெடாமல் எப்படிப் பாதுகாப்பது?
காய்ச்சின பாலின் ஆடையை நீக்கி கிளறி ஆற வைக்கவும். கொதித்த தண்ணீரில் சுத்தம் செய்த மண்பாத்திரத்திலோ, ஜாடியிலோ பாலை விட்டுக் குளிர்ந்த தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் அதை வைக்கவும். தண்ணீரில் நனைத்து பிழிந்த துணியினால் மூடி வைக்கவும். துணியின் நான்கு பக்கங்களும் பாத்திரத்திலிருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும். இப்படி ஓர் இரவு முழுவதும் மூடி வைத்தால், ஒரு கெடுதலும் வராமல் பாலைப் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். ஸ்டீல், அலுமினியம் போன்ற பாத்திரங்கள் உபயோகப்படுத்தக் கூடாது.
‘தக்காளி சூப்’ நல்ல நிறம் கிடைக்க,, என்ன செய்ய வேண்டும்.
பழுத்த சிவந்த தக்காளியைத் தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்தினால் சூப்புக்கு இயற்கையிலேயே நிறம் கிடைக்கும். அல்லது மிளகுப் பொடியையும் சர்க்கரையையும் கூடவே கலந்து கொண்டால் நல்ல நிறம் கிடைக்கும். அல்லது சூப் கொதிக்கும்போது, கொஞ்சம் கேரட்டை பொடியாகத் துருவிப் போட்டால் போதும்.”
“குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் காய்கறிகளை பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாமா? காய்கறிகள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்தால்தான் உடனே எடுத்து சமைக்க இலகுவாகும் இல்லாவிடில் என்ன செய்ய?”
“தண்ணீருள்ள பாத்திரத்தில் வாழைக்காயை வைத்தால், ஒரு வாரம் வரை பழுக்காமல் கெடாமல் புத்தம் புதியதாய் தோற்றமளிக்கும். ஆனால் தண்ணீரை ஒவ்வொரு நாளும் மாற்ற வேண்டும். உப்புக் கரைந்த நீரில் போட்டு வைத்திருந்தால், எலுமிச்சம் பழம் பல நாட்கள் கெடாமலிருக்கும்.
பச்சைமிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது மஞ்சள்தூள், தூவி சிறிது நேரம் மூடி வைத்திருந்தால், பல நாட்கள் கெடாமல் பச்சை நிறம் மாறாமலிருக்கும்.”
“காய்ந்த திராட்சை(கிஸ்மிஸ்), பேரிச்சம் பழம் போன்றவற்றை மிக்ஸியில் அரைக்கும் போது ஒட்டாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?”
“கொஞ்சம் எலுமிச்சை ஜூஸைக் கலந்து அரைத்தால், மிக்ஸியின் ஜாரில் ஒட்டாமல் இருக்கும்.”
“அப்பத்துக்கான மாவு நீர்த்துப் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”
“வெல்லத்தைக் கரைத்து மாவில் சேர்த்தால், மாவு நீர்த்துப் போய் விடும். அதனால் அரிசியை அரைக்கும் போது மாவு பாதி அரைபட்டதும் வெல்லத்தைச் சேர்த்து அரைத்தால் ‘ஃசாப்ட்டான’ கெட்டியான அப்பம் கிடைக்கும்.”
“மசால் வடை ஆறினாலும், சுவையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?”
“கடலைப் பருப்பு பாதி, பட்டாணிப் பருப்பு பாதி ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் அரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, பச்சைமிளகாய் பாதி, காய்ந்த மிளகாய் பாதி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைப்பதற்கு முன்பு 4 டேபிள்ஸ்பூன் ஊறிய முழு கடலைப்பருப்பைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு அரைத்த மாவுடன் கலந்து வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி, புதினா நறுக்கிப் போட்டு பெருங்காயம் சேர்த்து வடை தட்டினால், ஆறிய பின்பும் சாப்பிட ‘கிரிஸ்ப்பி’யாகவும் சுவையாகவும் இருக்கும். பிக்னிக், சுற்றுலா போன்று பயணம் போகும் போது எடுத்துச் செல்லலாம்.”
“நீர்மோர், திப்பி திப்பியாக இல்லாமல் ஒரே சீராக வர என்ன செய்ய வேண்டும்?”
“தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்து விட்டு, தண்ணீர் விட்டு பெருங்காயம், உப்பு, மல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.”

தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்!

தினம் ஒரு துவையல்!
30 சைடுடிஷ்!

சாப்பிட அமர்ந்தாலே, சிப்ஸ், ஸ்நாக்ஸ், வத்தல் எனப் பலருக்கும் ஏதாவது ஒரு சைடுடிஷ் தேவைப்படுகிறது. சாம்பார், ரசம், பருப்பு, பொரியல், கூட்டு, பச்சடி, பப்படம் என சகலமும் இருந்தால்தான், அது சமச்சீரான உணவாக இருக்கும். உடலுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் கிடைக்கும். பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் வீட்டில் சமையல் என்பதே ஏதாவது ஒரு குழம்பு, பொரியல் செய்வதுடன் முடிந்துவிடுகிறது. இதனால், உடலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
சிப்ஸ், மிக்‌ஸர், நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, வீட்டிலேயே மிகச் சுலபமாகச் செய்யக்கூடிய துவையலைச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி, போதிய சத்துக்களும் கிடைக்கும். 
காய்கறி, கீரை, மூலிகைகள் என எல்லாவற்றிலும் செய்யக்கூடிய துவையல் வகைகளை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சில துவையல்களை  சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா எனச் சிற்றுண்டிகளுக்கு சைடுடிஷ்ஷாகவும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு துவையல் இருந்தால், தயிர்சாதம்கூட‌ தேவாமிர்தமாக இருக்கும். 
இதில் சில ரெசிப்பிகளில் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, காயவைத்து, பொடித்து, பருப்புப் பொடி, தேங்காய்ப் பொடி எனப் பொடி வகைகளாகவும் மாற்றலாம். காயவைக்காமல் தண்ணீர் சேர்த்து அரைத்தால், துவையல். அரைத்துக் குழையவைத்துக் கூட்டாகவும் மாற்றலாம்.
 
இப்படி, பல்வேறு சுவைகளில் சத்துக்களை அள்ளித் தரும் இந்த ரெசிப்பிகளை தினமும் ஒன்று எனச் செய்து சாப்பிடுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சமையல் நிபுணர் லட்சுமி ஶ்ரீனிவாசன், ரெசிப்பிகளைச் சுவைபடச் செய்துகாட்ட, அதன் பலன்களைப்  பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பிரியங்கா.

சின்ன வெங்காயத் துவையல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - 100 கிராம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 4, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாயைப் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு டீஸ்பூன் எண்ணெயில், பூண்டு, புளி, வெங்காயம் சேர்த்து, பச்சை வாசனை போக, வதக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.
பலன்கள்:  சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் இருப்பதால், ரத்தசோகை வருவது தடுக்கப்ப‌டும். எலும்புகள் உறுதியாகும். குளிர்ச்சியைத் தரும். அனைவரும் சாப்பிட ஏற்றது.

முடக்கத்தான் கீரைத் துவையல்
தேவையானவை: சுத்தம் செய்து, ஆய்ந்த முடக்கத்தான் கீரை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு முடக்கத்தான் கீரை, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், புளி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீண்டும் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, அரைத்த தொக்கைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் எடுத்துவைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

பலன்கள்: மூட்டுவலிக்குச் சிறந்த நிவாரணி. வயிற்று உப்புசம் தீரும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலு ஊட்டும். ரத்தசோகையை நீக்கி, புத்துணர்ச்சி தரும்.

சௌசௌ துவையல்
தேவையானவை: தோல் நீக்கிய இளசான செளசெள - 1, காய்ந்த மிளகாய் - 8, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த் துருவல் - அரை மூடி.

தாளிக்க: கடுகு, பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உடைத்த உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய சௌசௌ, காய்ந்த மிளகாய், புளி, மற்றும் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி, ஆறவிட வேண்டும். இதை, மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.
பலன்கள்: கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. உடலுக்கு நல்ல வலுவைக் கூட்டும்.  நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகப் பிரச்னையைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

பீர்க்கங்காய்த் துவையல்
தேவையானவை: தோல், விதை நீக்கி நறுக்கிய பீர்க்கங்காய் - கால் கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு,  மஞ்சள் தூள் - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம், நல்லெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு வதக்க வேண்டும். நீர் வற்றும் வரை காயை வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
இந்தத் துவையல் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்.
பலன்கள்:  பீர்க்கங்காயில் வைட்டமின் சி, ரிபோஃப்ளோவின் அதிகம்.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.  பார்வைத்திறன் மேம்படும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

பீட்ரூட் - கேரட் துவையல்
தேவையானவை: தோல் சீவித் துருவிய பீட்ரூட், கேரட் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, புளி - சிறிய கோலி அளவு, பூண்டுப்பல் - 3, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: சிறிது நல்லெண்ணெயில் பூண்டை வதக்கி, துருவிய கேரட், பீட்ரூட், பச்சைமிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்க வேண்டும். தொக்கு பதத்துக்கு வரும் வரை இந்த விழுதைக் கிளறி இறக்க வேண்டும்.
பலன்கள்: இரும்பு, பொட்டாசியம், மக்னீஷியம் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பீட்டாகரோட்டின் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்னை தீரும். சக்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

கொத்தமல்லித் துவையல்
தேவையானவை: கொத்தமல்லித் தழை - 250 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், தேங்காய்த் துருவல் - 2 ஒரு கப், குடமிளகாய் - 2, கறுப்பு உப்பு மற்றும் மிளகுத் தூள் - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், குடமிளகாய் சேர்த்து அரைத்து, கறுப்பு உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
பலன்கள்:  மூட்டுவலி, வயிற்றுப் பொருமல் சரியாகும்.  அதிக உடல் எடை இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.  நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம் குணமாகும்.

தேங்காய் கிரீன் துவையல்
தேவையானவை: முற்றிய தேங்காய் (துருவியது) - அரை மூடி, பச்சைமிளகாய் - 6, கொத்தமல்லி - அரைக்கட்டு (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், மொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும். 
பலன்கள்:  தேங்காயில் புரதம், நல்ல கொழுப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எளிதில் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். 

பச்சைமிளகாய்த் துவையல்
தேவையானவை: ஊசிப் பச்சைமிளகாய் - 15 (கீறிக்கொள்ளவும்), புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் - சிறிது, வெல்லம் - 50 கிராம், உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்துப் பொரிக்கவும். பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, புளி, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். இதில், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வெல்லம் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கவும். வெல்லமும் எண்ணெயும் பச்சைமிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, சுவையையும் மணத்தையும் கூட்டும். 

பலன்கள்: பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வாய் கசப்பு நீங்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்துக்கு நல்லது.

தேங்காய் சிவப்புத் துவையல்
தேவையானவை: முற்றிய தேங்காய் (துருவிக்கொள்ளவும்) - அரை மூடி, காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப்பல் - 2, உப்பு - சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை: தாளிக்கும் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
 
பலன்கள்: தேங்காயில் புரதம் கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.  வாயுத் தொடர்பான பிரச்னைகள் வராது. வயிற்றுப்புண்னைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.

கமலா ஆரஞ்சு தோல் துவையல்
தேவையானவை: கமலா ஆரஞ்சுப் பழத்தின் தோல் நறுக்கியது - கால் கப், உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - சிறிய கட்டி, உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிது, புளி - கோலி குண்டு அளவு, காய்ந்த மிளகாய் - 6 அல்லது 8.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பழத் தோலைப் போட்டு வதக்கி, தனியே வைக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணெயில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்‌ஸியில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து, அரைக்க வேண்டும். தோசை, பிரெட், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடலாம்.
பலன்கள்: பொட்டாசியம், வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்களுக்கு நல்லது. கால்சியம் சத்து இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். உடல் குளிர்ச்சியடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.  வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் என்பதால், ரத்தசோகை வருவதைத் தடுக்கும்.

கொய்யா துவையல்
தேவையானவை: அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை நீக்கியது), பச்சை மிளகாய் - தலா 4, கொத்தமல்லி - சிறிதளவு,  எலுமிச்சை - 1, தேங்காய் (துருவிக்கொள்ளவும்) - கால் மூடி, உப்பு சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
பலன்கள்: அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. கொத்தமல்லி சேர்ப்பதால், உடலின் நச்சுக்களை நீக்கும். எலுமிச்சைச் சாறு சேர்ப்பதன் மூலம், வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நெல்லித் துவையல்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10 (வேகவைத்து கொட்டை நீக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கடாயில், ஒரு  டீஸ்பூன் எண்ணெயை விட்டு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, இதனுடன், உப்பு, வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து அரைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்:  உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதில் வைட்டமின் சி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன.  எடை குறையும். ஆஸ்துமா பிரச்னை நீங்கும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சேனைத் துவையல்
தேவையானவை: தோல் நீக்கித் துருவிய மலபார் சேனை (சிவப்பாக இருக்கும்) - ஒரு கப், உடைத்த உளுந்து - 4 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - சிறிய கட்டி, புளி - பெரிய நெல்லி அளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க:  கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், துருவிய சேனை சேர்த்து நன்றாக வதக்கி, மிதமான தீயில் வேகவிடவும்.  ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுத்து, ஆறியதும், சேனை, வறுத்த உளுந்து, உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். சிறிது எண்ணெயில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, ஐந்து முதல் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறி எடுக்கவும்.
பலன்கள்: சேனையில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

சுட்ட கத்திரிக்காய்த் துவையல்
தேவையானவை: பெரிய கத்திரிக்காய் - 1, உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், உப்பு, தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 6.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2, பருப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கத்திரிக்காயில் எண்ணெய் தடவி, ஆங்காங்கே துளைசெய்து (இல்லாவிட்டால் வெடித்துப் பிளந்துவிடும்) தோல் கருகும் வரை அடுப்பில் சுட வேண்டும். பிறகு, தோலை நீக்கி, மசித்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து, கடைசியாகத் தக்காளியை நறுக்கிப் போட்டு, வதக்கி ஆறவிட வேண்டும். உப்பு, மசித்த கத்தரிக்காய் சேர்த்து, மிக்ஸியில் ஒருமுறை சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
குறிப்பு: பெரிய கத்தரிக்காய் கிடைக்காவிட்டால், சிறிய கத்தரிக்காயைப் பயன்படுத்தலாம்.
பலன்கள்: கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.  நார்ச்சத்து நிறைந்தது. வயிறு நிரம்பிய உணர்வு மேலிடும். இரும்பு, புரதம், வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அனைவரும் சாப்பிடலாம்.  கத்திரிக்காய் அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

இஞ்சி - பூண்டுத் துவையல்
தேவையானவை: தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு -  ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.
பலன்கள்: பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது.

வெற்றிலை - பூண்டுத் துவையல்
தேவையானவை: கும்பகோணம் கார / கறுப்பு வெற்றிலை - 10, துவரம் பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - கோலி அளவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம் - சிறிதளவு.
தாளிக்க:  எண்ணெய் - 2  டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிட்டிகை.
செய்முறை: வெற்றிலையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் துவரம் பருப்பு, மிளகாய், சீரகத்தைப் போட்டுச் சிவக்க வறுத்து, வெற்றிலையைச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும். கஞ்சியுடன் இந்தத் துவையல் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
பலன்கள்: வெற்றிலை நல்ல செரிமானத்தைத் தரக்கூடியது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், அயோடின், பொட்டாசியம், நார்ச்சத்து இதில் அதிகம்.  வயிற்றுப் புண்களை ஆற்றும்.  கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை வராது. எலும்புகள் வலுப்பெறும்.

இஞ்சித் துவையல்
தேவையானவை: தோல் நீக்கித் துருவிய இளசான இஞ்சி, வெல்லம் - தலா 100 கிராம், உப்பு, புளி - தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் - சிறிதளவு, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை: இஞ்சித் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்:  இஞ்சி, கொழுப்பு, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், எலும்புகள் நன்றாக வலுப்பெற உதவும்.  செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு, இந்தத் துவையல்  மிகவும் நல்லது.

தேங்காய் - மாங்காய்த் துவையல்
தேவையானவை: துருவிய கிளி மூக்கு மாங்காய், துருவிய தேங்காய் - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 6, உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்.
செய்முறை: மாங்காய், தேங்காய், உப்பு, பச்சைமிளகாய், மஞ்சள் தூளை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்:  புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளன. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள், இந்தத் துவையலை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சோர்வை நீக்கும்.  நிறைய நீர்ச்சத்து இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகும்.

பரங்கிக்காய்த் துவையல்
தேவையானவை: நறுக்கிய பரங்கிக்காய் (விதை தோல் நீக்கியது) - ஒரு கப், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, புளி - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - கால் மூடி, பெருங்காயம் - சிறிய கட்டி.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பரங்கித் துண்டு, உப்பு, புளி சேர்த்து, நன்றாக வதக்கி ஆறவிடவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், இவற்றைத் தனித்தனியே ஒன்றரை டீஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்து, ஆறவிட வேண்டும்.  எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, கடுகு, வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின், ஏ, மற்றும் கே இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள்  அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

வாதநாராயணக் கீரைத் துவையல்
தேவையானவை: வாதநாராயணக் கீரை (ஆய்ந்து, அலசியது) - ஒரு கப், தோலுடன் உடைத்த கறுப்பு உளுந்து - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, புளி - சிறிய எலுமிச்சை அளவு, கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மிளகாய், வெந்தயம் போட்டுப் பொரித்துக் கொள்ளவும். அதே கடாயில், கறுப்பு உளுந்து, மிளகாய் சேர்த்துச் சிவக்க வறுத்து, வாதநாராயண இலையைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிட வேண்டும். வறுத்த, பொரித்த, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, மிக்ஸியில் கெட்டியாக அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில், கடுகு தாளித்து, துவையலில் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: வாதத்துக்குச் சிறந்த மருந்து. எளிதில் செரிமானம் ஆகும்.  வாயுத் தொல்லை நீங்கும். மூட்டு வலியைப் போக்கும். புரதம் அதிகம் இருப்பதால், இடுப்பு எலும்புகள், தசைகள் உறுதியாகும். வைட்டமின் சி இருப்பதால், சளி, ஆஸ்துமா  தொல்லை இருப்பவர்கள் சாப்பிடலாம்.

முளைக்கீரைத் துவையல்
தேவையானவை: முளைக்கீரை (சுத்தம் செய்து நறுக்கியது) - அரைக்கட்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உடைத்த உளுந்து - 4 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - சிறிது, பெருங்காயம் - ஒரு கட்டி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளி தவிர, எல்லாவற்றையும் எண்ணெயில் நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, புளி சேர்த்து அரைக்கவும். கீரை சாப்பிடாதவர்கள்கூட, இந்தத் துவையலை விரும்பிச் சாப்பிடுவார்கள். 

பலன்கள்:  நீர்ச்சத்து இதில் அதிகம்.  உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.  ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

கொடிக்கருணைக் கிழங்கு துவையல்
தேவையானவை: துருவிய கொடிக்கருணைக் கிழங்கு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மிளகு - ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றைத் தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கிழங்குத் துருவலைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதனுடன், வறுத்த பொருட்கள், மீதம் உள்ள அனைத்தையும் சேர்த்து, துவையலாக அரைத்துப் பரிமாறவும்.
பலன்கள்: உடம்பு வலி, மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தரும். சரும வறட்சியைப் போக்கும். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் உண்ண உடல் வலுவாகும்.

கொத்தமல்லி - புதினா துவையல்
தேவையானவை: புதினா, கொத்துமல்லி - தலா ஒரு கட்டு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் - தலா 3, உளுத்தம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உப்பு - சுவைக்கேற்ப. 
   
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பை வறுத்து, பெருங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து, சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் போட்டு இரண்டு திருப்பு திருப்பிவிட்டு (அதிகம் வதக்க வேண்டாம்), உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்து, துவையலைப் போட்டு நன்றாக வதக்கவும். ஒரு வாரம் வரை கெடாது.
பலன்கள்: வயிற்று உப்புசம் தீரும். செரிமானத்தை அதிகப்படுத்தும். உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றக் கழிவுகளை விரைந்து வெளியேற்றும். வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

புதினா கறிவேப்பிலைத் துவையல்
தேவையானவை: புதினா, கறிவேப்பிலை (சுத்தம் செய்து ஆய்ந்து நறுக்கியது) - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள் தூள், உப்பு - சிறிதளவு, புளி - 2 கோலி குண்டு அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு.
செய்முறை: இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் புதினா, கறிவேப்பிலை, மிளகாயைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து, இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கி இறக்க வேண்டும். தேங்காய், பருப்புச் சேர்க்காததால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்:  கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம், இதில் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் ஆகும்.  வாய் துர்நாற்றத்தைப் போக்கும். எலும்புகள் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தசோகை இருந்தால், இந்த துவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

வெந்தயக் கீரைத் துவையல்
தேவையானவை: ஆய்ந்து சுத்தம் செய்த வெந்தயக் கீரை - 2 கட்டு, வெள்ளை வெங்காயம் (நறுக்கியது) - 1, தக்காளி (நறுக்கியது) - 2, இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: சிறிது எண்ணெயில் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்து, கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்:  உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிறு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். இதில் வைட்டமின் சி இருப்பதால், உயர் ரத்த அழுத்தம், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

முருங்கைக் கீரைத் துவையல்
தேவையானவை: ஆய்ந்து கழுவிய முருங்கைக் கீரை - ஒரு கப், உடைத்த உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், நாட்டுத் தக்காளி ( நறுக்கியது) - 3, சிறிய வெங்காயம் - 4, பூண்டுப்பல் - 2, உப்பு  - சிறிதளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், தக்காளி மற்றும் கீரையைச் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும், உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றைத் தாளித்துச் சேர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், துளி வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.
பலன்கள்:  முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். கர்ப்பிணிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். கால்சியம், மக்னீஷியம், வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இளம் தாய்மார்கள் சாதத்துடன் பிசைந்து சாப்பிட, தாய்ப்பால் பெருகும்.

பிரண்டைத் துவையல்
தேவையானவை: தோல் நீக்கிய பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், புளி, உப்பு- தேவையான அளவு காய்ந்த மிளகாய் - 6, வெல்லம் - சிறிதளவு, தேங்காய் - கால் மூடி, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பிரண்டையை வெந்நீரில் போட்டு, ஒரு கொதிவந்ததும் இறக்கி வடிகட்ட வேண்டும். சிறிது எண்ணெயில், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும்.  எள்ளை கடாயில் போட்டு படபடவெனப் பொரியவிட்டு எடுக்க வேண்டும். வடிகட்டிய பிரண்டையைச் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கி இதனுடன் உப்பு, புளி, வெல்லம் சேர்த்து, வறுத்த எள், பருப்பைக் கலந்து அரைக்க வேண்டும்.
பலன்கள்:  ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க பிரண்டை உதவும். புரதம், நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பைக் கரைத்து, வயிறு தொடர்பான பிரச்னையைப் போக்கும். வாய்க்கசப்பை நீக்கும். அனைவரும் சாப்பிட ஏற்றது.

பருப்புத் துவையல்
தேவையானவை: துவரம் பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - 6, பெருங்காயம் - சிறிய கட்டி, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன், புளி - சிறிய கோலி அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தவிர மற்ற பொருட்களை நன்றாகச் சிவக்க வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பலன்கள்:  பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நல்ல உணவாக இருக்கும்.  நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பர‌ஸ் இதில் இருப்பதால், எலும்புகள் வலுப்பெறும்.  எளிதில் செரிமானம் ஆகும். உடலுக்கு உறுதியைத் தரும். இதை ‘விரதத் துவையல்’ என்றும் சொல்வார்கள்.

வேர்க்கடலைத் துவையல்
தேவையானவை: தோல் நீக்கி, வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், நறுக்கிய தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், உப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்:  வைட்டமின் ஏ, சி, இ மற்றும் நார்ச்சத்து, மக்னீஷியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து இதில் அதிகம். வேர்க்கடலை கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.  எளிதில் செரிமானம் ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தலைமுடி வளர்வதற்கு உதவும். இதயம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கும்.

அஞ்சறைப்பெட்டித் துவையல்
தேவையானவை: கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, உப்பு, புளி - சிறிதளவு, பெருங்காயம் - சிறிய கட்டி, கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், பூண்டுப்பல் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: 2 டீஸ்பூன் எண்ணெயில் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுத்து, ஆறவிட்டு அரைக்க வேண்டும். பழைய சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.
பலன்கள்: அதிகப் புரதச்சத்து நிறைந்த துவையல் இது. எளிதில் செரிமானம் ஆகும்.  குளிர்ச்சியைத் தர்க்கூடியது. செரிமானக் கோளாறு இருப்பவர்கள், இந்தத் துவையலைச் சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்றுப்புண்ணுக்கு இந்த துவையல் சிறந்தது.

ஃபிட்டான வயிறு! எளிய பயிற்சிகள் 6

ஃபிட்டான வயிறு!
எளிய பயிற்சிகள் 6பெரும்பாலான பெண்கள்,  30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம். சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும். பயிற்சியாளரின் துணையுட‌ன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்ல ப‌லனைத் தரும்.

அப்டாமினல் க்ரன்சஸ் (Abdominal Crunches)
தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டிகளை மடக்கியபடி வைக்க வேண்டும். கைகளை மடித்து, தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கால்களை நகர்த்தாமல், உடலை முன்புறமாக உயர்த்த வேண்டும். எந்த அள‌வுக்கு முடியுமோ அந்த அள‌வுக்கு உடலை முன்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதி தசைகள் இறுகி, வலுவடையும். முதுகு வலி, குறையும். வயிறு அழகான வடிவம் பெறும்.

பைசைக்கிள் க்ரன்சஸ் (Bicycle Crunches)
தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்தபடி உயர்த்த வேண்டும். தலையை சற்று உயர்த்தி, கைகளை மடித்து தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இப்போது, வலது கை முட்டியை இடது கால் முட்டியைத் தொடுவதுபோல் கொண்டுவர வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்பி, இடது கை முட்டி வலது காலைத் தொடும்படி செய்யவும். இது ஒரு செட். இதுபோல, 10 முதல் 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: அதிகப்படியான‌ கலோரி எரிக்கப்படும். இதனால், உடல் எடை குறையும். வயிறு, தொடைப் பகுதி தசைகள் இறுகி, உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கும்.

ஃப்ளட்டர் கிக் (Flutter kick)
தரையில் மல்லாந்து படுத்து, கால்களை உயர்த்த வேண்டும். கைகளை உடலுக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, இரண்டு கால்களையும் மேலும் கீழுமாக மாற்றி மாற்றி (நீச்சல் அடிப்பது போல்) உயர்த்தி இறக்க வேண்டும். இதை 15 முறைகள் செய்யவேண்டும்.

பலன்கள்: அதிகப்படியாகத் தொங்கும் தசைகளை இறுக்கி, வயிற்றுப் பகுதியை உறுதியாக்கும்.

ஹாம்ஸ்ட்ரிங் க்ரன்சஸ் (Hamstring Crunches)
தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்து,  பாதத்தைத் தரையில் பதிக்க வேண்டும். கைகளை காதுகளோடு ஒட்டியபடி தலைக்கு மேலாகக் கொண்டுசென்று, தரையில் வைக்க வேண்டும். இப்போது, தலை, மார்பகப் பகுதியை முன்னோக்கி நகர்த்தி, கைகளை உயர்த்தி, விரல்கள் கால் முட்டியைத் தொடுவது போல் கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால், கொழுப்பு கரைந்து, ஃபிட்டான வயிற்றுப் பகுதி கிடைக்கும்.

அயர்ன் மேன் (Iron man)
தரையில் குப்புறப்படுத்து, கால் விரல்கள் தரையைத் தொடுவதுபோல் வைக்க வேண்டும். கைகளை மடித்து, முட்டிப் பகுதி தரையைத் தொட்டபடி வைக்க வேண்டும். விரல்களை நன்றாக மடக்கிக்கொள்ளவும். முகம் தரையைப் பார்த்தபடி இருக்க
வேண்டும். கை மற்றும் பாதங்களில் உடல் தாங்கும்படி, உடலை மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலையில் 20 முதல் 30 விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: கால்கள் நன்றாக வலுப்பெறும். வயிற்றுப் பகுதித் தசைகள் இறுகும். தேவையற்ற கொழுப்பு குறையும்.

மவுன்டெய்ன் க்ளைம்பர் (Mountain climber)
தரையில் கைகளை ஊன்றியபடி குப்புறப் படுக்க வேண்டும். கால் விரல்கள் மற்றும் கைகளால், உடலைத் தாங்கியபடி, வலது காலை மட்டும் முன்னோக்கிக் கொண்டுவர வேண்டும். வலது காலைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும்போது, இடது காலை முன்புறமாக நீட்ட வேண்டும். இது ஒரு செட். இதுபோல, 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: மார்புப் பகுதி, கை, கால்கள் நன்கு வலுவடையும். கை, கால், இணைப்புத் தசைகள், வயிறு, தொடைப் பகுதித் தசைகள் நன்றாக இறுகும். உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கும்.

நாட்டு மருந்துக் கடை - 14

நாட்டு மருந்துக் கடை - 14
ணவுக்கு மணமூட்டியாக அடுப்பங்கரையில் இருப்பது சீரகம். மருந்தாக இருக்கும் பல மூலிகைகளை விருந்து படைக்கும் பொருளாக்கி, ‘உணவே மருந்து! மருந்தே உணவு!’ எனும் சூத்திரத்தைச் சோற்றுக்குள் புதைத்த மேதைகள் நம் சித்தர்கள். பார்க்க அவ்வளவு வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.
“போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங் காசமிராதக் காரத்திலுண்டிட”  என, சித்த மருத்துவ இலக்கியமான தேரன் வெண்பாவில், சீரனா நோயெல்லாம் வாராது காக்கும் போசனகுடோரி எனப் போற்றப்பட்டது சீரகம். பித்த நோய்களுக்கெல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், அஜீரணம், கண் எரிச்சல், சைனசிடிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு எனப் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என, விடாதிருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியும் 10 சீரகமும் பொடித்துத் தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.
உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக் கொண்டுவரும் நிலையில் (GERD), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரக நீர் அருந்துங்கள். “சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு ஆறு மாதக் கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக்கொள்கிறது” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இள வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தை தனித்தனியே கரும்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை, மிக்ஸியில் அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேனுக்கு, பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிறந்த துணை மருந்து. “எங்க போயி டாக்டர், இவ்வளவு சடங்கு சாங்கியமெல்லாம் பண்றது?” எனக் கேட்கும் நபர்களுக்கு, ‘சீரகச் சூரணம்’ என்றே சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. அந்தச் சூரணத்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் மட்டும் உலரவைத்து, அதே அளவுக்குச் சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக, நாட்டுச் சர்க்கரை கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் படிப்படியாகக் குறையும்.
சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்யும் சீரக வில்வாதி லேகியம் பித்த நோய்கள் பலவும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட ஒரு துணை மருந்தாக இதைப் பயன்படுத்த முடியும். நவீன ஆய்வுகளில் சர்க்கரை நோய் உருவாக்கப்பட்ட எலிக்கு சீரகத்தைத் தொடர்ந்து கொடுக்கையில், சர்க்கரை நோயின் முக்கிய பின் விளைவான கண்புரை நோய் (காட்ராக்ட்) வருவது தாமதப்
படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீரகத்திலுள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.
ஆதலால், பொங்கலோ, பொரியலோ, இனி சீரகம் இல்லாமல் இருக்க வேண்டாம். ஏனென்றால் கிடைப்பது மணம் மட்டுமல்ல... மருத்துவமும்கூட!
உலகை ஆளும் சீரகம்!
உலகின் மூத்த மணமூட்டியான சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் வரிக்குப் பதிலாக சீரகம் செலுத்தலாம் எனும் அரசாணை அந்தக் காலத்தில் இருந்ததாம். இன்று, சீரகம் மணமூட்டி மட்டும் அல்ல. உலகை ஆளும் ஒரு மருத்துவ உணவு (Functional food). நம்ம ஊர் ரசம், வடக்கின் மலாய் கோஃப்தா, டச்சு நாட்டின் சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொரோக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவுகளிலும் சீரகம் மணம் தந்து நோய் ஓட்டும் மருந்தாக இருக்கிறது.
பஞ்ச தீபாக்னி சூரணம்
குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடிசெய்து, சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து, பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர், இரண்டு முதல் நான்கு சிட்டிகை தேனில் குழைத்துக் கொடுக்க, நேரத்துக்கு பசியைத் தூண்டி, ஆரோக்கியமும் பேணும் இந்த அற்புத சூரணம்.